செய்திகள்

காஞ்சீபுரத்தில் லாரி டிரைவர் அடித்துக் கொலை

Published On 2018-02-15 15:29 IST   |   Update On 2018-02-15 15:29:00 IST
லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த ஒரிக்கை காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (32). மணல் லாரி டிரைவர். இவரது மனைவி சங்கரி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

கடந்த 12-ந் தேதி மணல் லாரி ஓட்டச்சென்ற சுரேஷ் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை மனைவி மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கீழம்பி ஏரியில் நேற்று மதியம் சதீஷ் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்ததும் நேற்று இரவு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சுரேசின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அவர்கள் சுரேசை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்றுவிட்டதாக கூறி ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரமணி, டி.எஸ்.பி. முகிலன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர்.

கடந்த 12-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சுரேஷ் ஓட்டி வந்த மணல் லாரியை மடக்கி உள்ளனர். அப்போது சுரேஷ் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் ஏரியில் கொலை செய்யப்பட்டு கிடப்பது உறவினர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுரேசை மர்ம நபர்கள் யாரேனும் அடித்து கொன்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் உடல் வைக்கப்பட்டு உள்ள காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews

Similar News