செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை

Published On 2018-02-15 10:17 IST   |   Update On 2018-02-15 10:17:00 IST
செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை வெல்டிங் மிஷினால் தகர்த்த கொள்ளையர்கள் 20 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வளாகத்தில் கார்ப்பரே‌ஷன் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.

இங்கு நள்ளிரவில் கொள்ளையர்கள் சிலர் புகுந்தனர். ஏ.டி.எம். மையத்தின் ‌ஷட்டரை உள்பக்கமாக கீழே இழுத்துவிட்ட அவர்கள் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். கியாஸ் வெல்டிங் மிஷினும் இருந்தது. அதனை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர்.

அதில் 2 அறைகளில் கட்டு கட்டாக பணம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு அறையில் இருந்த ரூ.20 லட்சம் பணத்தை மூட்டை கட்டி அள்ளிய கொள்ளையர்கள் அங்கிருந்து பணத்துடன் தப்பிச் சென்றனர். இன்னொரு அறையில் இருந்த ரூ.7 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கவனிக்காமல் விட்டுச் சென்றனர். இதனால் அந்த பணம் மட்டும் தப்பியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வங்கி மேலாளர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தின் உள்ளே பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். கொள்ளையர்களின் உருவம் அதில் பதிவாகி இருந்தது.

வடமாநில கொள்ளையர்கள் போன்ற தோற்றத்தில் இருந்த 2 பேர் முகமூடி அணிந்து காணப்பட்டனர். அவர்களின் கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தது. கொள்ளையர்களின் முகம் தெரியவில்லை. இதனால் ஏ.டி.எம்.மில் ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த நபர்கள் யார் என்பது தெரியவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை பிடிக்க வலை விரித்துள்ளனர். தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது ஏ.டி.எம். மையத்தில் இருந்து சுமார் ½ கி.மீ. தூரம் வரையில் ஓடிநின்று விட்டது. கைரேகை நிபுணர்களும் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். இந்த கைரேகைகள் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. #tamilnews

Similar News