செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 90 ஏக்கர் நிலம்

Published On 2018-02-15 04:22 GMT   |   Update On 2018-02-15 04:22 GMT
சென்னை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழக அரசு இந்த ஆண்டு இறுதிக்குள் 90 ஏக்கர் நிலம் ஒதுக்கும் என விமான நிலைய ஆணைய இயக்குனர் சந்திரமவுலி நம்பிக்கை தெரிவித்தார்.
ஆலந்தூர்:

சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டலம் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையம் சார்பில் பெருநிறுவன சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.32.6 லட்சம் செலவில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கவும், இதற்கான கட்டுமான கட்டிடங்கள் கட்டவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் நிகழ்ச்சி நடந்தது.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி முன்னிலையில் சென்னை விமான நிலைய ஆணைய இயக்குனர் சந்திரமவுலி, சென்னை பெருநகர மாநகராட்சி ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் ராமமுர்த்தி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் விமான நிலைய ஆணைய இயக்குனர் சந்திரமவுலி நிருபர்களிடம் கூறியதாவது:-

சாலைகளில் குப்பைகளை கொட்டுவது வருங்கால சந்ததியினருக்கு முக்கிய பிரச்சனையாக மாறிவிடும். இதை கவனத்தில் கொண்டு விமான நிலைய ஆணையத்தின் சமுதாய பொறுப்பு திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு 3 மாதத்தில் பணிகள் முடிந்து உரம் தயாரிக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக தானியங்கி நடைபாதை அமைக்கும் பணிகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும். விமான நிலையத்தில் பழைய கட்டிடங்களை இணைத்து விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகளை தொடங்குவதற்காக ரூ.1,500 கோடியில் டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

இதைப்போல ரூ.99 கோடியில் ஓடுபாதைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது. விமான நிலையத்தில் பணிகள் நடப்பதால் பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் பயணிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு தந்தால் இந்த பணிகள் விரைவாக செய்து முடிக்கப்படும்.

விமான நிலைய விரிவாக்கத்திற்காக மட்டுமின்றி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளும் செய்யப்பட வேண்டியிருப்பதால் தமிழக அரசிடம் இருந்து 150 ஏக்கர் கேட்டு இருந்தோம். அதில் 3 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியது. மேலும் 90 ஏக்கர் நிலம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ராணுவத்தின் கட்டுபாட்டில் உள்ள மீதமுள்ள நிலங்களை விரைவாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடையாறு ஆற்றில் ஓடுபாதை பற்றி சென்னை ஐ.ஐ.டி. ஆய்வு செய்து உள்ளது. விமான நிலையத்திற்கு மழைக்காலங்களில் தண்ணீர் வராமல் திருப்பி விட அவர்கள் சில பரிந்துரைகள் தந்து உள்ளனர். இது தமிழக அரசிடம் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு சந்திரமவுலி கூறினார். #tamilnews
Tags:    

Similar News