செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வி‌ஷம் குடித்த விவசாயி மரணம்

Published On 2018-02-11 22:10 IST   |   Update On 2018-02-11 22:10:00 IST
தன்னுடைய நிலத்தை 4 பேர் கொண்ட கும்பல் அபகரித்து விட்டதால் மனவேதனை அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கணிசம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 59), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது.

அந்த நிலத்தை 4 பேர் கொண்ட கும்பல் அபகரித்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலத்தை மீட்டுத்தரக் கோரி கிருஷ்ணமூர்த்தி அதிகாரியிடம் பலமுறை மனுக்கள் கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மனவேதனை அடைந்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி (திங்கட்கிழமை) கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் தன்னிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்கக்கோரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மனு கொடுக்க வந்த பொதுமக்களை சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். கிருஷ்ணமூர்த்தி வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் வி‌ஷப்பாட்டில் இருந்ததை கண்டு அதை பறிக்க முயன்றனர்.

ஆனால், கிருஷ்ண மூர்த்தி அந்த வி‌ஷப்பாட்டிலை எடுத்து வி‌ஷத்தை குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

அவரை போலீசார் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் கடந்த 6 நாட்க ளாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ண மூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவல் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்தது. ஆஸ்பத்திரிக்கு வந்த அவர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையே தவறான சிகிச்சையால் கிருஷ்ணமூர்த்தி இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. #tamilnews

Similar News