கோர்ட்டு அறைக்குள் செல்போன் பயன்படுத்திய நித்யானந்தாவின் சீடரை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை:
மதுரை ஆதீனத்தை நித்யானந்த சாமி கைபற்ற முயற்சித்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நித்யானந்தா தரப்பில் பதில் மனு கூட தாக்கல் செய்யாததை கண்டு நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.
இந்த வழக்கிற்கு நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை பிப்ரவரி 2-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின்போது, நித்யானந்தாவின் சீடர் நரேந்திரன் கோர்ட்டில் இருந்தார். அவர் வழக்கு விவரங்களை உடனுக்கு உடன், எஸ்.எம்.எஸ். மூலம் யாருக்கோ தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தார். இது நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து நரேந்திரனின் செல்போனை வாங்கி பரிசோதிக்க வேண்டும் அவர் கோர்ட் டுக்குள் இருந்தபடி யாருக்காவது எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தால், அவரை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.