செய்திகள்

பூண்டி ஏரியின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்தது

Published On 2018-01-29 06:58 GMT   |   Update On 2018-01-29 06:58 GMT
கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது.

கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த 2-ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

முதலில் ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 2400 கனஅடி வீதம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு முதலில் வினாடிக்கு 21 கனஅடி விதம் வந்தது. இதுப்படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 350 கனஅடி வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த 2-ந் தேதி பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் 26.05 அடியாக பதிவானது. 1012 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது.

இன்று காலை நிலவரப் படி நீர் மட்டம் 28.05 அடியாக உயர்ந்தது. 1329 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 26 நாட் களில் ஏரியின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது.

கண்டலேறு அணையிலிருந்து 26 நாட்களில் 650 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News