செய்திகள்
ஈஸ்வரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி: அ.தி.மு.க. தொண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-01-01 11:05 IST   |   Update On 2018-01-01 11:05:00 IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததையொட்டி வேதனையில் இருந்த ஈஸ்வரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் கிழக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 76). விவசாயியான இவர் தீவிர அ.தி.மு.க. தொண்டர். அப்பகுதியில் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் முன்னாள் கவுன்சிலராகவும் இருந்து உள்ளார்.

மேலும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் முதன்முதலாக கட்சி ஆரம்பித்தபோது அவரது ராமாபுரம் வீட்டிலேயே ஈஸ்வரன் தங்கி இருந்து கட்சி பணிகளை கவனித்து வந்தாராம். 2 மாதத்துக்கு பிறகு இதை அறிந்த எம்.ஜி.ஆர். அவரை அழைத்து அறிவுரை கூறி செலவுக்கு பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தாராம்.

ஊருக்கு வந்த ஈஸ்வரன் தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக்காக பாடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைதேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததையொட்டி ஈஸ்வரன் மிகவும் வேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென வி‌ஷத்தை எடுத்து குடித்து கட்டிலில் படுத்து கொண்டார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

தற்கொலை செய்து கொண்ட ஈஸ்வரனுக்கு பவளக்கொடி (72) என்ற மனைவியும், 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

இறந்த ஈஸ்வரன் உடலுக்கு அ.தி.மு.க. கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். #tamilnews




Similar News