செய்திகள்
குழந்தையை விற்ற பெற்றோர் - கைதான டாக்டர் மெகபூர்னிசா.

அரியலூர் அருகே பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற பெற்றோர் - டாக்டர் கைது

Published On 2017-12-23 07:44 GMT   |   Update On 2017-12-23 07:44 GMT
அரியலூர் அருகே பிறந்து 50 நாட்களான குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர்-டாக்டர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி - குண்டவெளி பகுதி காவெட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் (வயது 26). இவரது மனைவி மீனா (22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 3-வதாக கர்ப்பமடைந்த மீனாவுக்கு மீன்சுருட்டி சுகாதார நிலையத்தில் கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

வறுமையின் காரணமாக குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் ராமராஜ் - மீனா தம்பதியினர் தங்களது உறவினரான கடலூர் மாவட்டம் வடலூர் குறவர் தெருவை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் குழந்தையை யாருக்காவது தத்து கொடுத்து விடலாம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து கார்த்தி வடலூர் நாயுடு தெருவைச் சேர்ந்த சித்தா டாக்டர் மெகபூர்னிசா (60), அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கபாணி (57) ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவை ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (40)-புவனேஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் குழந்தையை தத்து எடுக்க முடிவு செய்து இருந்தனர். அவர்களது உறவினரான கோவையை சேர்ந்த அய்யாமோகன் என்பவரை மெகபூர்னிசா, சாரங்கபாணி இருவரும் தொடர்புக் கொண்டு குழந்தையை ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்திற்கு விற்றுள்ளனர். அந்த பணத்தில் ராமராஜ் - மீனா தம்பதியினரிடம் ரூ.80 ஆயிரத்தை மட்டும் மெகபூர்னிசா, சாரங்கபாணி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் மீன்சுருட்டி சுகாதார நிலைய மருத்துவர்கள் குழந்தைக்கு 45-வது நாள் தடுப்பூசி போடுவதற்கு ராமராஜ் - மீனா தம்பதியினர் கொண்டு வராததால் டாக்டர்கள் அவர்கள் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட குழந்தையை கேட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக கூறியதையடுத்து கலெக்டர் மற்றும் சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் லட்சுமி பிரியா உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் முகமது யூனிஸ்கான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து முகமது யூனிஸ்கான் மீன்சுருட்டி போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராமராஜ், மீனா, சித்தா டாக்டர் மெகபூர்னிசா, சாரங்கபாணி, செல்வராஜ், புலவர் அய்யா மோகன் ஆகிய 6 பேரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து 6பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News