செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி 1.63 கோடி பயனாளிகளுக்கு வேட்டி-சேலைகள்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Published On 2017-12-22 09:57 GMT   |   Update On 2017-12-22 09:57 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி 1.63 கோடி ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்படவுள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு ஆண்டுதோறும் ரேசன் கடைகள் மூலம் இலவச வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், கலெக்டர் பிரபாகர் தலைமையில் இன்று நடந்தது.

மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா எம்.எல்.ஏ.க் கள் தென்னரசு, ராஜா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு சுமார் 1.63 கோடி பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது.

அதன்படி ஈரோட்டில் 45, திருச்செங்கோட்டில் 53, திருப்பூரில் 16, கோவையில் 12 என மொத்தம் 126 விசைத்தறி கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 61 லட்சத்து 27 ஆயிரத்து 600 சேலைகளும், 62 லட்சத்து 39 ஆயிரத்து 100 வேட்டிகளும், திருச்செங்கோட்டில் 43 லட்சத்து 11 ஆயிரத்து 650 சேலைகளும், 61 லட்சத்து 45 ஆயிரத்து 500 வேட்டிகளும், கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 49 ஆயிரத்து 200 சேலைகளும், 8 லட்சத்து 61 ஆயிரத்து 100 வேட்டிகளும், திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 21 ஆயிரம் சேலைகளும், 5 லட்சத்து 81 ஆயிரத்து 500 வேட்டிகளும் என மொத்தம் 1 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 450 சேலைகளும், 1 கோடியே 38 லட்சத்து 27 ஆயிரத்து 200 வேட்டிகளும் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

தற்போது விசைத்தறி சங்கங்கள் மூலம் 81 சதவீத சேலைகளும், 100 சதவீதம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இருப்பிலுள்ள வேட்டி சேலைகள் 11.1.2018-க்குள் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, கொள்முதல் முகமை நிறுவனங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 100 போட்டி தேர்வு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இன்னும் 312 தேர்வு மையங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் திறக்கப்படும்’’ என்றார்.

Tags:    

Similar News