செய்திகள்
குண்டேரிபள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சி.

குண்டேரிபள்ளம் அணையில் உபரி நீர் வெளியேற்றம்: 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2017-10-28 10:48 IST   |   Update On 2017-10-28 10:48:00 IST
குண்டேரிபள்ளம் அணையில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொடர்ந்து 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோபி:

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலை மற்றும் இரவு நேரத்தில் மாவட்டத்தில் கோபி, பவானி உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-6
கோபி- 46
பவானி-25
பெருந்துறை-36.2
சத்தியமங்கலம்-5
மொடக்குறிச்சி-82
கவுந்தப்பாடி-35
சென்னிமலை-7
வரட்டுப்பள்ளம்-89

தொடர் மழை காரணமாக கோபி அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 42 அடியை எட்டியது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் அதிக அளவில் வருகிறது.

அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 91 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேறுகிறது.

இதனால் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், மோதூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தொடர்ந்து 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு இதேபோன்று கன மழை பெய்து குண்டேரிபள்ளம் அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது.

இதேபோல தற்போதும் அதிக அளவு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது.

எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Similar News