செய்திகள்

2015-ல் மழை வெள்ளத்தால் சேதம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் சீரமைப்பு

Published On 2017-09-12 07:14 GMT   |   Update On 2017-09-12 07:14 GMT
2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் உலக வங்கி நிதி உதவியுடன் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், சோழவரம் ஏரிகள் திகழ்கின்றன.

கடந்த 2015-ல் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளத்தால் இந்த 4 ஏரிகளும் சேதம் அடைந்துள்ளன. ஏரிகளின் கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டு பலவீனமடைந்துள்ளன.

உலக வங்கி அணைகள் மறுவாழ்வு, புனரமைப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த 4 ஏரிகளை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் ஏரிகளின் கரைகளை உயர்த்துதல், பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல், நீர் கசிவுகளை தடுத்தல், பழுது பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து உலக வங்கி அணைகள் சீரமைப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

உலக வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் சீரமைக்கப்பட உள்ளது. கடந்த 2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஏரிகள் பாதிப்படைந்து பழுதடைந்துள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு கதவுகள் பாதிப்படைந்துள்ளன. அணைகளில் இருந்து கசிந்து ஒழுகும் தண்ணீர் கசிவுகளை தடுக்கப்படும்.

செம்பரம்பாக்கம் ஏரி மூலம் கீழ்நிலை பகுதிகளில் உள்ள 2145 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்துள்ளன. கோவூர், பரணிபுதூர் பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்கு முக்கிய பாசனமாக அமைந்துள்ளது.

ஏரிகளை பலப்படுத்துவதற்காக 4 ஏரிகளுக்கும் கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவிடப்பட்டுள்ளது. தற்போது 2-வது கட்டமாக சீரமைப்பு பணிகள் தொடங்க பட உள்ளது. ஏரிகளின் கரைகளை வலுப்படுத்தி கரையில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது. அணைகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் சீரமைக்கப்படுகிறது. வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே இந்த பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி, சோழவரம் ஏரிகளில் தற்போது மிகவும் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 399 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 4 அணைகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி ஆகும். தற்போது பெய்த மழையால் குறைந்த அளவு மட்டுமே நீர் வரத்து வந்துள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் இந்த மாதம் ஓரளவு உயர்ந்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News