செய்திகள்
வனிஷா

காரிமங்கலம் மாணவி கொலையில் பிளஸ்-2 மாணவன் கைது

Published On 2017-08-31 11:12 IST   |   Update On 2017-08-31 11:12:00 IST
காரிமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கொலையில் பிளஸ்- 2 மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்து மாட்லாம்பட்டி அருகே உள்ள கெங்குசெட்டிபட்டி, உத்தண்டி கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவன். அரசு பஸ் டிரைவர். இவருடைய மனைவி சாந்தி. இவர்களது மகள் வனிஷா(14).

இவள் மாட்லாம் பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 26-ந்தேதி (சனக்கிழமை) பள்ளி விடுமுறை தினமான அன்று வீட்டில் தனியாக இருந்தபோது வனிஷா கைகள் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டாள். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் அப்பகுதியை சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் அக்கம் பக்கத்திலும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவன் மாணவியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

சஞ்சீவன்-சாந்தி தம்பதியினர் தங்கள் வீட்டின் முன்பு உள்ள அறையில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார்கள். இந்த கடையில் காசு கொடுக்காமல் கைதான மாணவன் இரண்டு தடவை பொருட்களை திருடியுள்ளான். இதனால், சாந்தி, அந்த மாணவனிடம் இனிமேல் திருடாதே என சத்தம் போட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று பகலில் சஞ்சீவன் வழக்கம்போல் டிரைவர் பணிக்கு சென்றார். தாய் சாந்தி தோட்டத்தில் வேலை செய்வதற்காக சென்றார். பின்னர் வனிஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

இதனை அறிந்த அந்த பிளஸ்-2 மாணவன் நைசாக கடைக்கு சென்று கடையில் இருந்த கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடினான். இதனை மாணவி வனிஷா பார்த்து விட்டாள். இது பற்றி தனது பெற்றோரிடம் கூறி மானத்தை வாங்குகிறேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வனிஷா வாக்குவாதம் செய்வதை தவிர்த்துவிட்டு உடனே வீட்டுக்குள் சென்று விட்டாள்.

தன்னை திட்டியதால் ஆத்திரம் அடைந்த மாணவன் நேராக வீட்டுக்குள் சென்று மீண்டும் சண்டை போட்டான். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து திடீரென வனிஷாவின் பின்பக்க தலையில் ஓங்கி அடித்தான். இதில் மாணவி நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்ததும், உடனே கழுத்தை அறுக்க முயற்சி செய்தான். அப்போது சத்தம் போட்டதால் வாயில் துணியை வைத்து இறுக்கமாக அமுக்கி, கைகளை பின்புறமாக இழுத்து வைத்து கட்டி கழுத்தை சரமாரியாக அறுத்து துடிக்க துடிக்க மாணவியை கொலை செய்தான். அதன்பிறகு பீரோ அருகில் கத்தியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து ஓடினான். தனது வீட்டிற்கு சென்ற அவன் குளித்து விட்டு வீட்டுக்குள் போய் அமைதியாக எதுவும் தெரியாததை போல் அமர்ந்திருந்தான்.

இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில் சந்தேகம் அடைந்த எஸ்.பி.சி.ஐ.டி. போலீசார், அவன் நடத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே கொலைக்கு பயன்படுத்திய கத்தியில் இருந்த கைரேகையை நிபுணர்கள் ஆய்வு செய்தபோது அவன் தான் கொலை செய்திருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து வீட்டிற்கு சென்று மாணவனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தோம். நான் தான் கொலை செய்தேன் என அவன் ஒப்புக்கொண்டான்.

சம்பவம் நடக்கும் கொஞ்சம் நாளுக்கு முன் ஊரில் செல்போன் திருடி உள்ளான். இது சம்பந்தமாக ஊரில் பஞ்சாயத்து பேசப்பட்டது. அப்போது ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட பின் அவனை விடுவித்தனர். ஊர் மக்கள் அவனை எச்சரித்து இனிமேல் இது போல் தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது. தவறான முறையில் நடந்தால் ஊரில் இருந்து ஒதுக்கி வைத்து விடுவோம் என கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் மீண்டும் அவன் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தான்.

இந்த நிலையில் தான் கடந்த 26-ந்தேதி மளிகை கடையில் இருந்த கல்லா பெட்டியில் பணம் திருடியபோது, அவனை கையும், களவுமாக கண்டுபிடித்த வனிஷா இது பற்றி ஊரில் சொல்லி விட்டால் பிரச்சனையாகி விடும். தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என கருதி வனிஷாவை தீர்த்து கட்டி இருக்கிறான்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவனை போலீசார் நேற்று சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Similar News