செய்திகள்

அரசு போக்குவரத்து கழக ஜீப் டிரைவர் தற்கொலை: அதிகாரிகளிடம் விசாரணை தொடங்கியது

Published On 2017-07-27 13:17 GMT   |   Update On 2017-07-27 13:17 GMT
அரசு போக்குவரத்து கழக ஜீப் டிரைவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மனைவி புகாரையடுத்து அதிகாரிகளிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மேட்டு நாசுவம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் பாலமுருகன் கடந்த திங்கட்கிழமை ஈரோடு அருகே உள்ள தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் அந்த வழியாக சென்ற ஒரு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு போக்குவரத்து கழக ஜீப் டிரைவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போக்குவரத்து கழக ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பாலமுருகன் மனைவி பிரேமா நேற்று மதியம் தனது உறவினர்களிடம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து எஸ்.பி.சிவக்குமாரிடம் கண்ணீர் புகார் மனு கொடுத்தார்.


அந்த மனுவில், “என் கணவர் சொந்த ஊருக்கு மாறுதல் கேட்டுள்ளார். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டார்கள். அவரும் 40 ஆயிரம் கொடுத்துள்ளார் ஆனால் என் கணவரை ஜீப் டிரைவர் பணியில் இருந்து பஸ் டிரைவராக மாற்றி விட்டனர். இது குறித்து அவர் மீண்டும் கேட்டபோது மேலும் லஞ்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால்தான் என் கணவர் மனம் உடைந்து ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து உள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் பிரேமாவிடம், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன்.. என்று உறுதி கூறினார்.

இதன்படி அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து ரெயில்வே போலீசாரின் விசாரணை இன்று தொடங்கியது. ரெயில்வே போலீசார் கூறும்போது “எங்களுக்கு விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து நாங்கள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளோம்” என்று கூறினர்.

இதை தொடர்ந்து ஜீப் டிரைவர் பாலமுருகன் தற்கொலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரும் என தெரிகிறது.

சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒருவித பீதி-பயத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News