செய்திகள்

திட்டக்குடி அருகே லாரி மீது பஸ் மோதல்: 2 பேர் பலி

Published On 2017-07-15 15:47 IST   |   Update On 2017-07-15 15:47:00 IST
திட்டக்குடி அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 15 பேரையும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திட்டக்குடி:

சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு 1 மணியளவில் அரசு பஸ் ஒன்று திருச்சி நோக்கி புறப்பட்டது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ்சை கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த அரசுகாரன் (வயது 42) ஓட்டி வந்தார்.

இன்று காலை 6-30 மணியளவில் அந்த பஸ் வேகமாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வெங்கனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று முன்னால் சென்ற மணல் லாரி மீது பயங்கரமாக மோதியது. விபத்தில் பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்தது.

இதில் பஸ்சில் வந்த செங்கல்பட்டை சேர்ந்த கண்டக்டர் மூர்த்தி (40), சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 15 பேரையும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களில் 6 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் இறந்த மூர்த்தி, ராஜா ஆகியோரின் உடல்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News