செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி நிறுவனங்களின் வேலை நிறுத்தம் தொடங்கியது

Published On 2017-07-06 13:02 IST   |   Update On 2017-07-06 13:02:00 IST
ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி நிறுவனங்களின் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது. இந்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் தினமும் ரூ. 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.
ஈரோடு:

ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் ஜவுளி நிறுவனங்கள் மிகவும் பாதிப்படையும். எனவே வரியில் இருந்து ஜவுளி தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஜவுளி நிறுவன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று ஜவுளி நிறுவனங்களின் உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள் அறிவித்து இருந்தனர்.

ஆனால் அருண் ஜெட்லியை சந்திக்க முடியாததால் ஜவுளி நிறுவனத்தினர் குறிப்பிட்டபடி இன்று (6-ந் தேதி) முதல் தொடர்ந்து 6 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், ஈரோடு கிளாத் மெர்சன்ட் அசோசியேசன், நூல் வியாபாரிகள் சங்கம், சைசிங்-பேக்டரி உரிமையாளர்கள் சங்கம்,

வீரப்பன்சத்திரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், கனி மார்க்கெட் தினசரி ஜவுளி சந்தை உள்பட 24-க்கும் மேற்பட்ட ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த சங்கங்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, திரு வேங்கிட வீதி, வெங்கடாச்சல வீதி, பிருந்தா வீதி, ராமசாமி வீதி, சொக்கநாத வீதி, காமராஜ் வீதி, தில்லை நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த வியாபார ஜவுளி கடைகள், ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் இன்று முதல் அடைக்கப்பட்டன. இதனால் இந்த வீதிகள் வெறிச்சோடி கிடக்கிறது.

ஜவுளி சங்கங்களின் உரிமையாளர்கள் இன்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் ஜவுளி நிறுவனங்களை சேர்ந்த திரளான பேர் கலந்து கொண்டனர்.

இவர்கள் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்பட்டு ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு மனு கொடுத்தனர்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டன. இந்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி வர்த்தகம் முடங்கி உள்ளன. தினமும் ரூ. 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.   

Similar News