செய்திகள்

சிற்றார் மலைகிராமத்தில் சுற்றும் புலியை கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு

Published On 2017-06-20 12:24 GMT   |   Update On 2017-06-20 12:24 GMT
சிற்றார் மலைகிராமத்தில் புலி நடமாடும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருப்பதை அடுத்து வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
நாகர்கோவில்:

குமரி மேற்கு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள சிற்றார் பகுதியில் ஏராளமான ரப்பர் எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு ரப்பர் பால் வெட்ட சென்ற தொழிலாளிகள் சிலர் கடந்த வாரம் இங்கு புலி ஒன்று சுற்றி வருவதை கண்டனர். இது பற்றி அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் சிற்றார் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது மலை கிராமத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் இருப்பதை கண்டனர். அது புலி தானா? என்பதை உறுதி செய்ய மலை கிராமத்தின் உட்புற பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் அமைத்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இக்காமிராக்களை ஆய்வு செய்த போது அதில் புலியின் நடமாட்டம் பதிவாகவில்லை. நேற்று மாலையில் மீண்டும் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது அதில் புலி ஒன்று நடந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

உடனே வன ஊழியர்கள் அந்த காட்சியை அதிகாரிகளுக்கு காண்பித்தனர். அவர்கள் சிற்றார் பகுதியில் சுற்றும் புலியின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

இது பற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சிற்றார் பகுதியில் சுற்றும் புலிக்கு 6 வயது இருக்கும். இந்த புலி கடந்த சில மாதங்களாக இங்குதான் சுற்றி வந்திருக்கும். சிற்றார் பகுதியில் ஏராளமான முள்ளம்பன்றி மற்றும் காட்டு முயல்கள் அதிகம் உள்ளன. இவை தான் புலிக்கு விருப்பமான உணவு. எனவே இந்த புலி உணவுக்காக இந்த பகுதியில் முகாமிட்டு இருக்கலாம்.

இந்த புலி இது வரை வீட்டு விலங்குளான ஆடு, மாடு போன்றவற்றை வேட்டை ஆடவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் அவற்றையும் புலி அடித்து கொன்றுவிடும். இதுவரை இப்புலி, பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கவில்லை.

புலி இப்போது மலையடிவாரத்தில் மட்டுமே சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதற்கான உணவு கிடைக்காத பட்சத்தில் இந்த புலி, ஊருக்குள் வரவும் வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு புலியை கூண்டு வைத்து பிடித்து அதனை மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட வனத்துறை ஏற்பாடு செய்யும்.

அது வரை மலைக்காடுகளுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தனியாக செல்ல வேண்டாம். 4 அல்லது 5 பேராக சேர்ந்து செல்ல வேண்டும். புலி பிடிபடும் வரை யாரும் தனியாக செல்லக்கூடாது

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News