சேத்தியாத்தோப்பில் கோவில் அருகே ரத்தக்காயங்களுடன் வாலிபர் பிணம்: போலீசார் விசாரணை
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு விநாயகபுரம் பகுதியில் கருப்பசாமிகோவில் உள்ளது. இந்த கோவிலை சேத்தியாத்தோப்பை சேர்ந்த பூசாரி ஆறுமுகம் (வயது 35) நிர்வகித்து வருகிறார்.
இவர் வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்னமி ஆகிய நாட்களில் குறிசொல்லி வருகிறார். குறிகேட்பதற்காக பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்துசெல்வர். அவர்கள் தங்குவதற்காக கோவில் அருகே கொட்டகை அமைத்துள்ளார். குறிபார்க்க வருபவர்கள் அந்த கொட்டகையில் தங்குவர். குறி பார்த்து முடிந்தவுடன் உடனே புறப்பட்டுவிடுவர்.
இந்த நிலையில் இன்று காலை ஆறுமுகம் கோவிலுக்கு வந்தார். அப்போது கொட்டகையில் வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். உடனே சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் பிணத்தை பார்வையிட்டனர். அவரது காது, தலையில் ரத்தக்காயம் இருந்தது. பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிணமாக கிடந்தது யார்? என விசாரித்தனர். அதில் அவர் அரியலூர் மாவட்டம் காடுவெட்டி பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் குமரவேல் (வயது 28) என்பதும்.
இவர் சேத்தியாத்தோப்பில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு தண்ணீர் பாக்கெட் விற்றுவந்ததும் தெரியவந்தது. ஜெயராமன் எப்படி இறந்தார். யாராவது கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.