செய்திகள்

கோபி அருகே ரோட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் 1½ வயது குழந்தை பலி

Published On 2017-06-15 15:36 IST   |   Update On 2017-06-15 15:37:00 IST
கோபி அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி ரோட்டில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கோபி:

சத்தியமங்கலம் வடக்குபேட்டையைச் சேர்ந்தவர் நவீன்குமார்(வயது 35). இவர் சென்னை ஆவடி ராணுவ பண்டக சாலையில் ஊழியராக பணிபுரிகிறார்.

இவரது மனைவி கலைசெல்வி (வயது 28). இவர்களின் மகன் நிஷாந்த் (வயது 1½).

இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு போய்விட்டு காரில் சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை உறவினர் அசோக்குமார் ஓட்டி வந்தார். இவரது மனைவி சித்ரகலா.

கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் அருகே உள்ள வளைவில் கார் வந்த போது ரோட்டின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி ரோட்டில் கார் கவிழ்ந்தது.

இதில் காரில் வந்த குழந்தை நிஷாந்த் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே நிஷாந்த் பரிதாபமாக இறந்தான்.

மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு சிறுவலூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினார்கள்.

Similar News