செய்திகள்

பொய் புகாராக கருதி ஜெர்மனி பெண் கற்பழிப்பு வழக்கு முடித்து வைப்பு

Published On 2017-04-27 12:06 IST   |   Update On 2017-04-27 12:12:00 IST
இந்திய நாட்டின் மீது அவப்பெயர் சுமத்துவதற்காக ஜெர்மனி பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தாரா என்று விசாரித்து வழக்கை பொய் வழக்காக முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மாமல்லபுரம்:

ஜெர்மன் நாட்டு பெண் லோமன் ஜென்னி மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்தார்.

கடந்த 2-ந் தேதி பட்டிப்புலம் கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபட்ட போது தன்னை 3 பேர் கற்பழித்ததாக மாமல்லபுரம் போலீசாரிடம் முதலில் புகார் கொடுத்தார்.

பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது பத்திரிகையாளர்களிடம் 2 பேர் கற்பழித்ததாக கூறினார்.

மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகள் வேண்டாம், புகார் கொடுத்ததற்கான அறிக்கை மட்டும் கொடுங்கள் என்றார்.

எனினும் போலீசார் அதை மறுத்து 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். சைபர்கிரைம், உளவுத்துறை, கடலோர காவல்படை, ஊர்க்காவல் படை என ஒத்துழைப்புடன் அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி கற்பழிப்பு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இது தொடர்பாக சந்தேகப்பட்ட நபர்களின் 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை லோமன்ஜென்னிக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி விசாரித்தனர். ஆனால் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தொடர்ந்து கூறி வந்தார். இதனால் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் வாரணாசி சென்றிருந்த லோமன் ஜென்னி அங்கிருந்து போலீசாருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் விசாரணை அறிக்கைகளை மட்டும் அவரது நாட்டு தூதரகம் மூலம் வாங்கி விட்டு ஜெர்மன் சென்று விட்டார்.

இதனால் தற்போது அந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது அவர் யார், அங்கு என்ன தொழில் செய்கிறார். இந்திய நாட்டின் மீது அவப்பெயர் சுமத்துவதற்காக பொய் புகார் கொடுத்தாரா என்று விசாரித்து வழக்கை பொய் வழக்காக முடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Similar News