செய்திகள்

அருள் வாக்கு கூறுவதாக பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த அரசு ஊழியர் சஸ்பெண்டு

Published On 2017-03-16 17:25 GMT   |   Update On 2017-03-16 17:25 GMT
நாமக்கல்லில் அருள் வாக்கு கூறுவதாக பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில்  உதவியாளராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் நாமகிரிப்பேட்டை அருகில் உள்ள அரியா கவுண்டம்பட்டி சண்டி கருப்புசாமி கோவிலில் பூசாரியாகவும் உள்ளார்.

இவர் மீது திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி கடந்த 13-ந் தேதி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் புகார் மனு கொடுத்தார்.

அதில், கடந்த 2013-ம் ஆண்டு முதல்  எனது கணவர் அண்ணாதுரை உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தார்.  அருள்வாக்கு சாமியாரும், முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளரின் உதவியாளருமான ராஜேந்திரனிடம்  எங்களை சிலர் அழைத்து சென்றனர்.

அவர், யாரோ செய்வினை வைத்து உள்ளனர். நான் மந்திரித்து தரும் எண்ணையை உடலில் தடவி வந்தால் குணமாகி விடும் எனக் கூறி  4 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டார்.

6 மாதங்கள் கழித்து பவுர்ணமி பூஜை செய்ய வேண்டும் என்று கூறி ரூ. 80 ஆயிரம் பெற்றுக் கொண்டார். அந்த பூஜையில் மஞ்சள் நிற புடவைக் கட்டி கொண்டு கலந்து கொண்டேன்.

ஆனால் ராஜேந்திரன் எந்த எண்ணையும் தரவில்லை.தற்போது அங்குள்ள கோவில் முன்பு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் நோய் சரியாகி விடும் எனக்கூறி  5 லட்சம் பணம் கேட்டார். நான் பணம் கொடுக்க மறுத்தேன்.  அதற்கு அவர் நீ பவுர்ணமி பூஜையன்று உடை மாற்றும்போது எடுக்கப்பட்ட  ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. அதை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்.

அரசு ஊழியராக இருக்கும் ராஜேந்திரன் குடும்ப பிரச்சினை காரணமாக வரும் பெண்களை மிரட்டி பணம் வசூலித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்த ஆசியா மரியம் உத்தரவிட்டார். 

இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அருள்வாக்கு பெற வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக ராஜேந்திரன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

Similar News