செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்

Published On 2017-02-20 10:08 GMT   |   Update On 2017-02-20 10:08 GMT
சென்னை விமான நிலையத்தில் கழிவறையில் கிடந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான முனையம் வருகை பகுதியில் கழிவறை உள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் ஆண்கள் கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு தொழிலாளர்கள் சென்றனர்.

அங்கு கேட்பாரற்ற நிலையில் ஒரு கருப்பு நிற பிளாஸ்டிக் பை இருந்தது. அதைப் பார்த்த ஊழியர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அங்கு போலீசாருடன் விரைந்து வந்த அதிகாரிகள் வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தில் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் அந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் அபாயகரமான பொருள் எதுவும் இல்லை என்று உறுதி செய்தபின் அந்த பேக்கை பிரித்து பார்த்தனர்.

அதில் 500 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை விமானத்தில் கடத்தி வரப்பட்டிருக்கலாம். சுங்க துறை அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து கழிவறையில் வைத்து விட்டு சென்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை கடத்தி வந்தது யார் என்பதை அறிய விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா வீடியோ பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News