செய்திகள்

60 வயது முதியவருக்கு 3-ம் தாரமாக 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து வைக்க முயற்சி

Published On 2017-02-06 13:18 IST   |   Update On 2017-02-06 13:18:00 IST
60 வயது முதியவருக்கு 3-ம் தாரமாக 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து வைக்க முயன்றதால் வீட்டைவிட்டு வெளியேறிய மாணவி ஈரோடு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாள்.
ஈரோடு:

நாகை மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்புபடிக்கும் மாணவிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

அதே பகுதியை சேர்ந்த 60-வது வயது முதியவர் ஒருவருக்கு 14 வயதே நிரம்பிய மாணவியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர்.

அந்த மாணவி கூலித் தொழிலாளியான தனது தந்தை மற்றும் தாயாரிடம் இதுபற்றி கேட்டாள். நான் படிக்க வேண்டும் திருமணம் செய்ய மாட்டடேன் என்று கூறினாள்.

எனினும் அதையும் மீறி 60 வயது முதியவருக்கு தங்களது மகளை திருமணம் செய்து வைக்க உறுதியாக இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளும் நடந்தது.

அந்த முதியவர் ஏற்கனவே 2 திருமணம் செய்து 3-ம் தாரமாக மாணவியை திருமணம் செய்ய ஆசையுடன் இருந்தார்.

பெற்றோரின் திட்டத்தை முறியடிக்க அந்த மாணவி வீட்டைவிட்டு வெளியேறினாள். பஸ் ஏறி திருப்பூர் வந்தார். அங்கு பஸ் நிலையத்தில் எங்கு செல்வது? என்று தவித்து கொண்டிருந்தாள்.

அந்த மாணவியை கவனித்த ஈரோடு தம்பதியினர் அவளிடம் விசாரித்தனர். அவள் விசயத்தை சொன்னாள்.

உடனே அந்த தம்பதியினர் பரிதாபப்பட்டு மாணவியை ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பிறகு ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஈரோடு “சைடு லைன்” அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.

இதையொட்டி அதன் இயக்குனர் அருண் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ராஜ் ஆகியோர் வந்து அந்த மாணவியிடம் விசாரித்தனர்.

மாணவியோ நான் திருமணம் செய்து கொள்ள மாட்டடேன், படிக்க வேண்டும் என்றுகூறியபடி அழுதாள். பிறகு அவர்கள் மாணவியை ஈரோடு கொள்ளுகாட்டு வலசு ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

காப்பகத்தில் அந்த மாணவியை பார்த்து கொள்வதாகவும் படிக்க வைப்பதாகவும் தெரிவித்தனர்.

Similar News