செய்திகள்

புதுவையில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பலி

Published On 2017-01-29 05:27 GMT   |   Update On 2017-01-29 05:27 GMT
பன்றி காய்ச்சலில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் புதுவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டு மற்றும் முருங்கப்பாக்கம் பகுதிகளை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் உடல்நிலை சரியில்லாமல் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு ஜிப்மர் டாக்டர்கள் தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2 பேருக்கும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி 2 பேரும் சில தினங்களுக்கு முன்பு இறந்தனர். பன்றி காய்ச்சலில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் புதுவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் கூறியதாவது:-

பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல் நோய்க்கு உரிய பயிற்சி அளித்துள்ளோம்.

பன்றி காய்ச்சலில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு நோய் பரவாமல் இருக்க தடுப்பு மருந்துகள் வழங்கி உள்ளோம். தேவையான மருந்துகளும் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

பன்றி காய்ச்சல் நோயால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்மரிலும், கோரிமேடு அரசு மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவோர் யாருக்கேனும் பன்றி காய்ச்சல் நோய் தென்பட்டால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதோடு குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க நகராட்சி மற்றும் கொம்யூன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். புதுவையில் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை.

இவ்வாறு டாக்டர் ராமன் கூறினார்.

புதுவை மக்களிடம் பன்றி காய்ச்சல் நோய் பீதி ஏற்படக்கூடாது என்பதால் இறந்தவர்கள் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News