செய்திகள்
கடலூர் திருவந்திபுரத்தில் மஞ்சுவிரட்டு நடந்தபோது எடுத்த படம்

கடலூர் திருவந்திபுரத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி - ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Published On 2017-01-16 15:08 IST   |   Update On 2017-01-16 15:09:00 IST
கடலூர் திருவந்திபுரத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம்:

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாட்டு பொங்கலன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

நேற்று மாலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. திருவந்திபுரம், தொட்டி, வரக்கால்பட்டு, சாலைக்கரை, பில்லாளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் தாங்கள் வளர்த்து வரும் பசு மற்றும் காளை மாடுகளை அலங்கரித்து கெடிலம் ஆற்றுக்கு கொண்டு வந்தனர்.

இதன்பின்னர் மாடுகளை கொண்டு வந்தவர்கள் மாடுகளை கையில் பிடித்துக்கொண்டு கெடிலம் ஆற்றை 3 முறை வலம் வந்தனர். அப்போது ஆற்றின் கரையை நோக்கி அனைத்து மாடுகளும் ஓடின. இதனை ஆற்றங்கரையிலும் பாலத்தின் மேலும் நின்று ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சி 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. முன்னதாக அதிகாலையில் 3.30 மணிக்கு தேவநாத சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரத்தில் ஆண்டாள் மற்றும் நாச்சியாருடன் தேவநாதசாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அசம்பாவித சம்பவம் ஏதேனும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதே போல் நெல்லிக்குப்பத்தில் உள்ள பங்களா தெருவிலும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாடுகளை இளைஞர்கள் விரட்டிச் சென்றனர்.



Similar News