செய்திகள்

கடலூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 4 பேர் கைது

Published On 2017-01-12 13:37 IST   |   Update On 2017-01-12 13:37:00 IST
கடலூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கடலூர் அருகே நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு நடத்தினர். கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் இன்று காலை நாம் தமிழர் கட்சியினர் திரண்டனர்.

அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தீர்மானித்தனர். அதைத்தொடர்ந்து மைதானத்தை சுற்றி தடுப்பு கம்புகளை கட்டினர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது போன்று மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெற்றன.

கிராமங்களில் இருந்து 15 காளை மாடுகளை மைதானத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஒவ்வொரு காளைகளாக மைதான பகுதிக்கு விரட்டி விடப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர்.

காளைகள் அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடின. ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதை அறிந்து திருவந்திபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

காளைகளை இளைஞர்கள் அடக்குவதை பார்த்து ரசித்து கரகோ‌ஷம் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் நாம் தமிழர் கட்சியினர் காளைகளை விரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசு, கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ரவி, திருவாரூர் மாவட்ட பொருளாளர் பாலாஜி, கடலூர் நகர செயலாளர் நாராயணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் விசாரணை நடத்தி வருகிறார்.

தடையை மீறி நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News