செய்திகள்

தனியார் நிறுவன அலுவலர் வீட்டில் வருமானவரி சோதனையில் பணம், நகைகள் சிக்கியது

Published On 2017-01-05 15:14 IST   |   Update On 2017-01-05 15:14:00 IST
கீழக்கரை இ.டி.ஏ. நிறுவனத்தின் அலுவலர் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம், நகை சிக்கியதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம்:

துபாயில் உள்ள இ.டி.ஏ. நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றியவர் ஹமீதுகான் (வயது62). இவருடைய வீடு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நைனாமுகம்மது தண்டையார் தெருவில் உள்ளது.

துபாயில் குடும்பத்தினருடன் வசித்து வந்த ஹமீது கான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கீழக்கரைக்கு வந்துள்ளார்.

இவரது வீட்டில் மதுரை வருமானவரித்துறை ஆணையர் அஜய்ரத் தோட்சிங் தலைமையில் 2 பெண் அதிகாரிகள் உள்பட மொத்தம் 8 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வருமான வரித்துறையினர் 10 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த ஹமீதுகான் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

இந்த சோதனையின் முடிவில் வருமானவரித் துறையினர் 2 சூட்கேஸ்களில் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மேலும், ஹமீதுகானையும் மதுரைக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சோதனை முடிந்து வெளியே வந்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணம், நகை கைப்பற்றப்பட்ட விபரம் குறித்து கேட்ட போது, எவ்வித தகவலும் தெரிவிக்க மறுத்து விட்டனர். 2 சூட்கேசுகளில் கணக் கில் காட்டப்படாத ஆவணங்கள், பணம், நகை இருக்கலாம் என கூறப்படுகிறது.

Similar News