தேர்தல் விதி மீறல் வழக்கு: பண்ருட்டி கோர்ட்டில் ராமதாஸ்-திருமாவளவன் ஆஜராகவில்லை
பண்ருட்டி:
கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பண்ருட்டி தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர். அப்போது விதி முறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ம.க. நிறு வனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,
நடிகர் நெப்போலியன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று விசாரணை நடந்தது.
இன்று கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நடிகர் நெப்போலியன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி உள்பட 50 பேர் ஆஜராகவில்லை.
ராமதாஸ் சார்பில் திண்டிவனம் வக்கீல் ராஜாராமன், திருமாவளவன் சார்பில் வக்கீல் பூபாலன், வேல்முருகன் சார்பில் வக்கீல் செல்வராஜ், சபா.ராஜேந்திரன், நெப்போலியன் ஆகியோர் சார்பில் வக்கீல் வெங்கடேசன் ஆகியோர் ஆஜராகி மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகளும் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து வருகிற 26-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.