செய்திகள்

கடலூர் - மரக்காணத்தில் பரவலாக மழை

Published On 2016-12-16 11:13 IST   |   Update On 2016-12-16 11:13:00 IST
வார்தா புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிப்பதால் கடலூர், மரக்காணத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலூர்:

வங்கக்கடலில் உருவான வார்தா புயல் கடந்த 12-ந் தேதி சென்னையில் கரையை கடந்தது. இந்த புயல் வலுவிழந்து அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக நிலை கொண்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடலூரில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. காலை வரை நீடித்தது. காலை 6 மணிக்குமேல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை கொட்டுகிறது. ரோடுகளில் தண்ணீர் பெருகி ஓடுகிறது.

மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், திருவந்திபுரம், பாலூர், பட்டாம்பாக்கம், காராமணிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை பலத்த மழை பெய்தது. மக்கள் குடை பிடித்தபடி சென்றனர்.

வார்தா புயல் கரைகடந்த பின்பு கடலூரில் கடல் சீற்றம் குறைவாக உள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். ஆனால் ஆழ்கடலில் நீரோட்டத்தின் வேகம் அதிகரித்துள்ளது.

எனவே ஆழ்கடல் பகுதியில் மீனவர்களுக்கு அதிக மீன் கிடைக்கவில்லை. அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். இதையடுத்து கடற்கரை பகுதிகளில் அவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று பரவலாக மழை பெய்தது. விழுப்புரத்தில் காலை 5.50 மணியளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.

மரக்காணத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. 7.30 மணியளவில் மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

மரக்காணம், அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு, எண்டியூர், முருக்கேரி, பிரம்மதேசம், கைப்பாணிக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மரக்காணத்தில் கடலில் அதிக சீற்றம் இல்லை. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

Similar News