செய்திகள்

பெண்ணாடம் அருகே லாரி மீது கல்லூரி பஸ் மோதி விபத்து: 25 மாணவிகள் காயம்

Published On 2016-12-16 10:34 IST   |   Update On 2016-12-16 10:34:00 IST
பெண்ணாடம் அருகே லாரி மீது கல்லூரி பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 25 மாணவிகள் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ஆவினங்குடி போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெண்ணாடம்:

பெரம்பலூரில் தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரிக்கு மாணவிகளை அழைத்து செல்ல 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் கடலூர் மாவட்டத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

இன்று காலை கல்லூரி பஸ் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மாணவிகளை ஏற்றிக் கொண்டு பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டி ருந்தது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் காயம் அடைந்தனர்.

மேலும் பஸ்சில் பயணம் செய்து கல்லூரி பேராசிரியைகள், தீபா, ரம்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சிலர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News