செய்திகள்

தடையை மீறி சாலை மறியல்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட 6 பேர் விடுதலை

Published On 2016-12-08 10:35 GMT   |   Update On 2016-12-08 10:35 GMT
தடையை மீறி சாலை மறியல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட 6 பேரை விடுதலை செய்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்:

2013-ம் ஆண்டு வன்முறையை தூண்டி விடுவதாக கூறி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழையக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்த தடையை நீக்கக் கோரி பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைத்தலைவர் தாமரைக்கண்ணன், முன்னாள் மத்திய மந்திரி வேலு, முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி, புதுவை மாநில அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கடலூரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதையடுத்து தடையை மீறி சாலைமறியலில் ஈடுபட்டதாக ஜி.கே.மணி உள்பட 6 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்தவழக்கு விசாரணை கடலூர் நீதித்துறை 2-ம் எண் நடுவர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.

இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதி ரமேஷ் விசாரணை நடத்தினார்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணைத்தலைவர் தாமரைக்கண்ணன், முன்னாள் மத்திய மந்திரி வேலு, முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி, புதுவை மாநில அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். பா.ம.க.சார்பில் வக்கீல் தமிழரசன் ஆஜராகி வாதாடினார்.

Similar News