குடோனில் பதுக்கி வைத்த ரூ.37½ லட்சம் பட்டாசுகள் பறிமுதல்: வியாபாரி கைது
திருப்பத்தூர்:
தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பட்டாசு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பட்டாசு கடை நடத்துபவர்கள் வருவாய்த்துறையினரிடம் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்துள்ளனர். அது குறித்து அனுமதி பெற்ற பட்டாசு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டமும் நடத்தினர்.
திருப்பத்தூரில் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் சிவஞானம் என்பவர் காகித குடோன் வைத்துள்ளார். இவர் தற்போது பட்டாசு கடை வைப்பதற்கு அனுமதி பெற்று குடோனுக்கு எதிரே பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது குடோனில் அனுமதியின்றி பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த குடோனில் பட்டாசுகள் பாதுகாப்பான முறையில் வைக்காமலும் திடீரென தீப்பிடித்தால் அதனை அணைப்பதற்கான உபகரணங்கள், தண்ணீர் மற்றும் மணல் நிரப்பிய வாளி எதுவுமே அங்கு அவர் வைக்கவில்லை. திடீரென தீவிபத்து ஏற்பட்டால் விபரீதம் ஏற்படும் அபாயமும் இருந்தது.
இந்தநிலையில் அங்கு திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த குடோனில் 1, 500 பட்டாசு ‘கிப்ட் பாக்ஸ்’கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றின் விலையும் ரூ.2,500 என பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. அனுமதியின்றியும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமலும் வைத்திருந்ததால் 1, 500 ‘கிப்ட் பாக்ஸ்’களையும் போலீசார் பறிமுதல் செய்து திருப்பத்தூர் தோரணபதியில் உள்ள வெடிமருந்து குடோனில் ஒப்படைத்தனர்.
பின்னர் சிவஞானத்தையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் கைப்பற்றப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.37½ லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.