செய்திகள்
வாணியம்பாடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினர்.

கருணாநிதி உடல் நிலை குறித்து அவதூறு: வேலூர் பெண் மீது வழக்கு

Published On 2016-10-15 07:01 GMT   |   Update On 2016-10-15 07:01 GMT
கருணாநிதி உடல்நிலை குறித்து அவதூறு பரப்பிய வேலூர் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாணியம்பாடி:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து தவறான மற்றும் அவதூறான தகவல் ‘பேஸ்புக்’கில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ‘அம்மா சிங்கம் சவிதா வேலூர் டி.எம்.கே.’ என்ற பெயரிலான ‘பேஸ்புக்’ பக்கத்தில் அந்த தகவல் பதிவாகி இருந்தது.

இதை பார்த்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். தவறான தகவலை பதிவேற்றம் செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு கொடுக்க வேலூர் மாவட்டம் வாணியம்பாடி போலீஸ் நிலையத்துக்கு நேற்று தி.மு.க.வினர் சென்றனர்.

வேலூர் மாவட்ட தி.மு.க. வக்கீல்கள் அணி சார்பில் தேவகுமார், செந்தில்வேலன், துரைராஜ் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் புகார் மனுவை கொடுத்தனர். ஆனால் இது போன்ற மனுவை வேலூர் சைபர் கிரைம் பிரிவில்தான் கொடுக்க வேண்டும் என்று கூறி புகாரை பெற போலீசார் மறுத்தனர்.

அப்போது வக்கீல்கள், ஏற்கனவே இதுபோன்ற அவதூறு வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகாரை ஏற்க மறுப்பது ஏன்? என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

புகாரை பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்தால்தான் இங்கிருந்து செல்வோம் என்று கூறி வக்கீல்களும், உடன் வந்திருந்த தி.மு.க.வினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் புகாரை பெற்றுக்கொண்டனர்.

அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

வேலூரை சேர்ந்த சவிதா என்ற பெண் முகநூல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து தவறாக பதிவு செய்துள்ளார்.

தவறான தகவலை முகநூல் பக்கத்தில் பதிவு செய்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அதன்பேரில் கருணாநிதி உடல்நிலை குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டதாக கூறி வேலூரை சேர்ந்த சவிதா என்ற பெண் மீது வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

‘பேஸ்புக்’ முகவரியை வைத்து அந்த பெண் பற்றி வாணியம்பாடி போலீசாரும், வேலூர் சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் மற்றும் தி.மு.க. வக்கீல் அணியினர் நேற்று மாலை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனிடம் புகார் மனு அளித்தனர். இது குறித்து அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முகநூலில் ஒருவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி அவதூறு கருத்துகளை பரப்பி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் பற்றி அவதூறு பரப்பி வருபவர்களை போலீசார் எவ்வாறு உடனடியாக கைது செய்து வருகின்றனரோ அதுபோன்று கருணாநிதி பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளோம்’ என்றார்.

Similar News