செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2016-10-11 15:09 IST   |   Update On 2016-10-11 15:10:00 IST
சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்:

சென்னை, விமான நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையத்தில் பணிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தொழிலாளர்களை அடிக்கடி இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட சுமார் 60-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும். சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பிட்ட தொழிலாளர்களை பழி வாங்கும் நடவடிக்கையாக இடமாற்றம் செய்வதாவும். இது பற்றி கேட்டால் ஒப்பந்த தாரர்கள் மிரட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

அப்போது திடீரென போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தொழிலாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி விமான நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

Similar News