செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் சட்டபூர்வமாக அமைக்கப்படும்: பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி

Published On 2016-10-06 09:23 IST   |   Update On 2016-10-07 17:24:00 IST
பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி, காவிரி மேலாண்மை வாரியம் சட்டபூர்வமாக அமைக்கப்படும் என பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய பிரதேச மாநிலத்தின் சார்பாக டெல்லி மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு கடந்த 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்து உள்ளேன். வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து நான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்.

காவிரி பிரச்சினையில் மற்ற கட்சிகளுக்கு இருக்கும் ஆர்வத்தைவிட பா.ஜனதா கட்சிக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து பா.ஜனதா கட்சி போராட்டங்களை நடத்தி அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜனதா கட்சி ஆதரிக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப்போவதில்லை என மத்திய அரசு எப்போதும் சொல்லவில்லை. வாரியத்தை அமைக்கக்கூடாது என்ற கர்நாடக மாநிலத்தின் வாதத்தையும் ஏற்கவில்லை.

காவிரி பிரச்சினையில் உள்ள சட்ட சிக்கல் பற்றி யாரோ சொல்லி இருக்கிறார்கள். இதுபோல் 8 வாரியங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்றம் சொல்லி வாரியங்கள் அமைக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் சட்டமாக கொண்டு அமைக்கப்பட்டால்தான் அந்த வாரியங்கள் அதிகாரபூர்வமாக இருக்கும். நீதிமன்றம் சொல்லி மேலாண்மை வாரியம் அமைத்தால் பிறகு கர்நாடகத்தில் இருந்து நீதிமன்றம் சென்றால் அந்த வாரியம் செல்லாததாக மாறிவிடும். இதனால்தான் மத்திய அரசு நீதிமன்றத்தில் விவரமாக கூறி உள்ளது. இதை நீதிமன்றமும் ஏற்று உள்ளது.

எதிர்காலத்தில் எந்த வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி கவனமாக செயல்படக்கூடியவர். நிச்சயமாக மேலாண்மை வாரியம் முறையாக, பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி சட்டபூர்வமாக அமையும்.

தமிழகத்தில் இருந்து பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் வருகிற 9 மற்றும் 10-ந் தேதி டெல்லி சென்று காவிரியில் கர்நாடகத்தின் பொய்யான தகவல்களை பற்றிய விவரங்களை மத்திய அரசிடம் சொல்வோம்.

தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி பிரதமரிடம் சென்று பேச முயன்றால் அவர் அந்த பிரச்சினைகளை அதிகமாக தெரிந்து வைத்து இருக்கி்றார். காவிரி உள்பட அனைத்து பிரச்சினைகளையும் அறிந்து அவற்றை தீர்க்க பிரதமர் செயல்படுவார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சட்ட முடிவு எடுத்து இட ஒதுக்கீடுகளை எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்காமல், 24 மணி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கின்ற நிலையை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியது.

ஆனால் தி.மு.க., நீதிமன்றத்திற்கு சென்று, இப்போது உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜனதா கட்சி இப்போது முதல் பணிகளை தொடங்கி செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News