செய்திகள்

கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடையை வந்தடைந்தது: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2016-09-28 12:17 GMT   |   Update On 2016-09-28 12:17 GMT
கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று அதிகாலை கடைமடையை வந்தடைந்தபோது விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நெல்மணிகளை தூவி வரவேற்றனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணல்மேல்குடி ஆகிய சுற்றுவட்டார தாலுக்காவில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் விவசாய பாசன நிலம் உள்ளது. இந்த நிலங்களுக்கு தேவையான தண்ணீரை 168 ஏரிகளில் சேகரிக்கப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 24-ந்தேதி கல்லணை கால்வாயும் பாசனத்திற்காக திறக்கப்பட்டது.

திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியான புதுக்கோட்டை நாகுடி பகுதிக்கு இன்று அதிகாலை வந்தது. காவிரி நீரை வரவேற்கும் விதமாக பொதுப்பணித்துறை கல்லணை கால்வாய் கோட்ட நாகுடி உதவி பொறியாளர் புஷ்பராணி, புதுக்கோட்டை கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் கணேசன், முன்னாள் அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் சுப்பையா, விவசாய சங்க பிரதிநிதி செல்லப்பன், வீரப்பன், நிர்வாகிகள் கழுகுமலை செல்வம் ஆகியோர் பொங்கி வரும் புதுவெள்ளத்தை மலர் மட்டும் நெல்மணிகளை தூவி வரவேற்றனர்.

பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட நீர் கடைமடை வரை வந்து சேர்ந்தது. நேரடி நெல் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீரில் அடித்து வரப்பட்ட மரங்கள், குப்பை கூழங்களை பொதுப் பணித்துறை ஊழியர்கள் அகற்றி நீர் விரைவாக செல்ல ஏதுவாக வழிவகை செய்தனர்.

Similar News