செய்திகள்

அனுமதியின்றி அம்பேத்கார் சிலை திறப்பு: திருமாவளவன் உள்பட 11 பேர் விடுதலை - விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-09-27 10:35 GMT   |   Update On 2016-09-27 10:35 GMT
அனுமதியின்றி அம்பேத்கார் சிலை திறந்த வழக்கில் திருமாவளவன் உள்பட 11 பேரை விடுதலை செய்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கல்லிப்பாடி மற்றும் நெடுஞ்சேரி ஆகிய பகுதிகளில் 16.7.2011-ல் அம்பேத்கார் சிலை அமைக்கப்பட்டது.

கட்சித்தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு அந்த சிலைகளை திறந்து வைத்தார்.

கல்லிப்பாடி மற்றும் நெடுஞ்சேரி பகுதிகளில் அனுமதியின்றி அம்பேத்கார் சிலைகளை திறந்து வைத்து மரியாதை செலுத்தியதாக திருமாவளவன் உள்பட 12 பேர் மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார்.

இந்த வழக்கு விசாரணை விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்2-ல் நடைபெற்று வருகிறது. நீதிபதி அறிவு விசாரணை நடத்தி வந்தார். இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. திருமாவளவன் உள்பட 11 பேர் மதியம் 12.30 மணிக்கு ஆஜரானார்கள்.

இந்த வழக்கில் திருமாவளவன் உள்பட 11 பேரை விடுதலை செய்து நீதிபதி அறிவு தீர்ப்பு கூறினார்.

கோர்ட்டில் இருந்து வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்பேத்கார் சிலைக்கு அனுமதியின்றி மாலை அணிவித்ததாக எங்கள் மீது பொய் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளோம். நாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிடுகின்றன. தொகுதி பங்கீடு குறித்து 30-ந்தேதி உறுதி செய்யப்படும்.

போட்டியிடும் இடங்களில் 1-ந்தேதி முதல் 3-ந் தேதி வரை வேட்பு மனுதாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோர்ட்டில் திருமாவளவன் ஆஜரானதையொட்டி விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராள மானோர் திரண்டிருந்தனர். அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Similar News