செய்திகள்
காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடிய போது எடுத்த படம்.

தமிழக விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி

Published On 2016-09-27 08:42 IST   |   Update On 2016-09-27 08:42:00 IST
காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கடலூர் மாவட்ட விவசாயிகளுடன் பேசினார். அப்போது அவர் வெட்டிவேர் சாகுபடி குறித்து கேட்டறிந்தார்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் நொச்சிக்காடு, தியாகவல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வெட்டிவேர் பயிர் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், மகசூலை அதிகப்படுத்தவும் மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கடலூர் மாவட்டம் நொச்சிக்காட்டில் வெட்டி வேர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கலந்துரையாடல் விவரம் வருமாறு:-

பிரதமர் நரேந்திர மோடி:- கடலில் இருந்து எவ்வளவு தூரத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்துள்ளர்கள்.

விவசாயி:- கடலில் இருந்து 200 மீட்டர் முதல் 4 கிலோ மீட்டர் வரையிலும் சாகுபடி செய்துள்ளோம்.

மோடி:- வெட்டிவேருக்கு எவ்வாறு தண்ணீர் பாய்ச்சுகிறீர்கள்.

விவசாயி:- விவசாய கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறோம்.

மோடி:- ஒரு சொட்டு தண்ணீரை கூட வீணாக்காமல், விவசாயத்துக்கு பயன்படுத்துங்கள். வெட்டிவேர் என்ற பெயரை மாற்றலாமா? புதிய உயர் ரகங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டு வெட்டிவேர் சாகுபடி செய்து நல்ல மகசூலை பெறுங்கள்.

விவசாயி:- நீங்களே வெட்டிவேருக்கு நல்ல பெயரை வையுங்கள்.

இவ்வாறு கலைந்துரையாடல் நடைபெற்றது.

வெட்டி வேர் ஒரு சிறந்த நறுமண தாவரம். இதன் வேரில் இருந்து பெறப்படும் நறுமண எண்ணெய், வாசனை திரவியங்கள், சோப்பு, சுவிங்கம், குளிர்பானங்கள் போன்றவை தயாரிப்பதற்கு பயன்படுகிறது. மருத்துவ தொழிலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேரின் மூலம் பல்வேறு கைவினை பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

Similar News