சிதம்பரம் அருகே நள்ளிரவில் பொதுமக்களை பயமுறுத்திய ராட்சத முதலை பிடிப்பட்டது
கடலூர்:
சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதி கல்யாணி நகரை சேர்ந்தவர் கணேசன்(வயது 45) விவசாயி. இவர் நேற்று வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அவரது வீட்டின் முன்பக்க கதவை யாரோ தட்டுவதுபோல் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின்முன் 7 அடி நீளமும், 500 கிலோ எடையும் முள்ள முதலை படுத்து கிடந்தது.
அந்த வழியாக காரில் வந்த சிலரும் ராட்சத முதலையை பார்த்து திடுக்கிட்டனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. அனைவரும் முதலையை பார்த்தனர்.
இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். வீட்டுமுன் கிடந்த முதலையை பிடிக்க முயன்றனர். ஆனால் அது அவர்கள் கையில் சிக்காமல் அங்குமிங்கும் ஓடியது.
2 மணிநேரம் போராடி முதலையை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். பின்னர் முதலையை வக்காரமாரி குளத்தில் கொண்டு விட்டனர். அதன் பின்னர் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் ஏராளமான முதலைகள் உள்ளன. இந்த குளத்தில் தற்போது தண்ணீர் வற்றி வருகிறது. இதனால் குளத்தில் உள்ள முதலைகள் அங்கிருந்து வெளியேறி கால்வாய் மற்றும் குளங்கள் வழியாக ஊருக்குள் வருகின்றன.
கணேசனின் வீட்டின் அருகில் உள்ள பெரியவாய்க்கால் சேறும், சகதியுமாய் உள்ளது. அங்கிருந்து வந்த முதலைதான் பொதுமக்களை பயமுறுத்தி உள்ளது. வக்காரமாரி குளத்தில் இருந்து வெளியேறும் முதலைகள் சிதம்பரத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி பொதுமக்களை கடித்து குதறி வருகிறது.
இதனால் உயிர்பலி ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. பொதுமக்கள் இரவில் நேரங்களில் ரோட்டில் நடந்து செல்ல அஞ்சுகின்றனர். முதலை பீதியினால் பொதுமக்கள் இரவு தூங்காமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வக்காரமாரி குளத்தில் அதிக அளவு தண்ணீர் தேக்க வேண்டும். அங்கிருந்து முதலைகள் வெளியேறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் முதலை பீதி நீங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.