செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வாங்கி தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி: பெண் கைது

Published On 2016-09-23 10:19 IST   |   Update On 2016-09-23 10:20:00 IST
சுய உதவி குழுக்களுக்கு கடன் வாங்கி தருவதாக ரூ. 2½ லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புதுத்துறை கிராமத்தில் சோழன், அன்னை, ரோஜா, ஜாஸ்மின், முல்லை உள்ளிட்ட 10 மகளிர் சுய உதவிக் குழு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஊக்குனர் மற்றும் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழு உறுப்பினர்களை சீர்காழி அருகே உள்ள விநாயககுடியை சேர்ந்த சகுந்தலா, சீர்காழி கோவிலான் தெருவை சேர்ந்த சந்திரா ஆகியோர் அணுகி ஒவ்வொரு குழுவிற்கும் தலா ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கி தருவதாக கூறி உள்ளனர்.

சீர்காழி பிடாரி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இந்த கடன் பெற்று தருவதாகவும், அதற்கு ஒவ்வொரு உறுப்பினரும் ரூ. 2 ஆயிரம் தர வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.

அதன்படி ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்தை வசூல் செய்துள்ளனர். 3 மாதம் ஆகியும் கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் வங்கியை தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போது வங்கி நிர்வாகத்தினர் நாங்கள் யாருக்கும் கடன் கொடுப்பதாக கூறவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சகுந்தலா, சந்திரா ஆகியோரிடம் கேட்ட போது பணம் தர முடியாது என கூறி தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மகளிர் குழுவை சேர்ந்த புதுத்துறை நடுத்தெரு சுகந்தி சீர்காழி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அழகு துரை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட சகுந்தலாவை கைது செய்தனர்.

அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News