செய்திகள்

நாகை பகுதியில் படகு பழுதாகி கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு

Published On 2016-09-10 17:43 IST   |   Update On 2016-09-10 17:43:00 IST
நாகை பகுதியில் படகு பழுதாகி கடலில் தத்தளித்த 7 மீனவர்களை மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் மீட்டனர்.

நாகப்பட்டினம்:

நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 46). மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 31-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த செல்வம் (37), சின்னதுரை (50), சதீஷ் (35), ஆதிகேசவன் (27), மோகன் (29), கந்தசாமி (35), ரத்தினசாமி (30) ஆகிய 7 பேரும் கடுவையாற்றில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி அவர்கள் மீன்பிடித்து கொண்டு இருக்கும் போது அவர்கள் சென்ற படகின் என்ஜின் பழுதானது. இதனால் அவர்கள் என்ன செய்வது என தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர்.

அவர்கள் இதுகுறித்து இந்திய கடலோர காவல்படைக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களிடம் உதவி கேட்டனர்.

பின்னர் அந்த மீனவர்கள் 2 விசைப்படகுகளில் சென்று தத்தளித்த 7 மீனவர்களையும், படகையும் நாகை துறைமுகத்திற்கு மீட்டு வந்தனர்.

இதுகுறித்து மீட்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-

நாங்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது படகு என்ஜின் பழுதானது. அப்போது இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் நாங்கள் 2 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்தோம். பின்னர் அந்த வழியாக வந்த மீனவர்கள் எங்களையும், படகையும் மீட்டு கரை சேர்த்தனர். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News