செய்திகள்

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் எதிரே கழிவறை இடமாற்றம் செய்ய பக்தர்கள் கோரிக்கை

Published On 2016-09-03 11:53 IST   |   Update On 2016-09-03 11:53:00 IST
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் எதிரே உள்ள கழிவறையை இடமாற்றம் செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

வெள்ளிக்கிழமை மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடந்த மாதம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக கோயிலுக்கு முன்னர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றியது. நகராட்சியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றனர்.

இந்நிலையில் திருக்கோயிலின் ராஜகோபுரம் எதிரே சாலைத் திருப்பத்தின் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள நகராட்சி கழிப்பறையினை இடமாற்றம் செய்ய வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இந்த கழிப்பிடம் ராஜகோபுரம் எதிரில் சாலை வளைவில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை கழிப்பறை எதிரே சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர்.

சாலையின் திருப்பத்தில் இருபுறமிருந்தும் வரும் நான்கு சக்கர வாகனங்களால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. இதனால் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மேலும் கோயிலின் தெற்கு கோபுரம் உள்ள பகுதியில் நகராட்சியின் சார்பில் ஏற்கனவே ஒரு கழிவறை இயங்கி வருவதால் ராஜகோபுரம் எதிரே உள்ள இந்த நகராட்சி கழிவறையினை இடமாற்றம் செய்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க காஞ்சீபுரம் நகராட்சி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

Similar News