செய்திகள்

பணி நீக்கம் செய்த ஊழியருக்கு நிலுவை தொகை வழங்காததால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஜப்தி செய்யவந்த கோர்ட்டு ஊழியர்கள்

Published On 2016-09-02 13:04 IST   |   Update On 2016-09-02 13:04:00 IST
பணி நீக்கம் செய்த ஊழியருக்கு நிலுவை தொகை வழங்காததால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சீபுரம்:

வாலாஜாபாத் வெள்ளேரியம்மன் கோவில் புதுத்தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த 1996-ம் ஆண்டு கஜேந்திரனும் அவருடன் பணிபுரிந்த வேறு சிலரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து கஜேந்திரன் வழக்கு தொடர்ந்ததில் சென்னை முதலாவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் 2007-ம் ஆண்டு வரை ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்க உத்தரவிட்டது.

ஆனால் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகம் 2003 ஆண்டு வரையான ஊதியம் மட்டும் அளித்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் ஊதியம் மற்றும் சில சலுகைகளை வழங்கவில்லை என கஜேந்திரன் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உரிய இழப்பீடு வழங்கவில்லையெனில் அலுவலகத்தை ஜப்தி செய்யலாம் என கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதையடுத்து ஊழியருக்கு இழப்பீடு தொகை வழங்காத வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோர்ட்டு உத்தரவை காட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் வழக்கு தொடர்ந்த கஜேந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒருவார கால அவகாசத்தில் நிலுவை தொகையினை வழங்குவதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News