செய்திகள்

திருப்பூர் குமரனின் உயிர் தியாகத்தை கேட்டு கண் கலங்கிய மத்திய மந்திரி

Published On 2016-08-22 16:00 IST   |   Update On 2016-08-22 16:00:00 IST
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை மந்திரி மகேஷ் சர்மா நேற்று சென்னிமலை சென்றார், அப்போது திருப்பூர் குமரனின் உயிர் தியாகத்தை கேட்டு கண் கலங்கி அழுதார்.
சென்னிமலை:

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை (தனி பொறுப்பு) மந்திரி மகேஷ் சர்மா நேற்று ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் நடந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பிறகு அவர் சென்னிமலைக்கு சென்றார். அங்கு சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.

திருப்பூர் குமரனின் உயிர் தியாகத்தை பற்றியும் அவர் நாட்டுக்காக உழைத்ததையும் மத்திய மந்திரியிடம் அங்குள்ளவர்கள் எடுத்து கூறினர்.

வெள்ளையர்களின் குண்டாந்தடி தன் உடம்பை பலமாக தாக்கினாலும் தேசிய கொடி கீழே விழாமல் தோளில் தாங்கி பிடித்தப்படி தன் உயிரை விட்டார் என்று கூறியதை கேட்டதும் மத்திய மந்திரி மகேஷ் சர்மா கண் கலங்கி அழுதார்.

இதைத்தொடர்ந்து சென்னிமலை  தேர்நிலை அருகே உள்ள குமரனின் நினைவு இல்லத்துக்கு சென்றார். அங்கு குமரனின் வாரிசு அண்ணாதுரை மத்திய மந்திரியை வரவேற்றார். அவரது கையை பிடித்து மத்திய மந்திரி திருப்பூர் குமரனின் தியாகத்தை கூறி மெய்சிலிர்த்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தியாகி குமரனுக்கு நினைவு இல்லம் கட்ட மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் மாநில அரசு எங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மேலும் அதற்கு முன்பாக மாநில அரசிடம் அதற்கான நிலத்தை அதன் உரிமையாளர் ஒப்படைக்க வேண்டும். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த குமரனின் தியாகத்தை போற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அருகில் இருந்த குமரனின் வாரிசு அண்ணாதுரை தற்போது குரனின் நினைவு இல்லம் உள்ள இடத்தை வழங்குவதாக அறிவித்தார். உடனே அவரை மத்திய மந்திரி கட்டி அணைத்து கொண்டு பாராட்டினார்.

Similar News