செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் ராஜநாகம் இறந்தது: உடல் நல பாதிப்பால் இறந்ததாக அதிகாரி தகவல்

Published On 2016-08-20 09:35 IST   |   Update On 2016-08-20 09:35:00 IST
கர்நாடகாவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்ட அரியவகையைச் சேர்ந்த ராஜநாகம் உடல் நல பாதிப்பினால் இறந்ததாக பூங்கா அதிகாரி தெரிவித்தார்.
வண்டலூர்:

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் உள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவில் குளிர்சாதன வசதி கொண்ட கூண்டில் பராமரிக்கப்பட்டு வந்த இந்திய ராஜநாகம் ஒன்று மர்மமான முறையில் இறந்தது. இதனால் பூங்காவில் இந்திய ராஜநாகம் இல்லாமல் இருந்தது.

இதைத்தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மிக அரியவகை உயிரினங்களில் ஒன்றான ராஜநாகம் இப்பூங்காவில் காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் கருதி மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் விலங்குகள் பரிமாற்ற முறையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிலிக்குலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு ஆண் ராஜநாகங்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வந்தது.

இதன் பின்னர் பூங்காவில் வெளிப்புற சூழலில் ராஜநாகத்தை கண்ணாடி வழியாக பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஒரு ஆண் ராஜநாகம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டது.

இதனையடுத்து மற்றொரு ஆண் ராஜநாகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜநாகம் இறந்தது குறித்து வண்டலூர் பூங்கா துணை இயக்குனர் சுதாகர் கூறியதாவது:-

கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அரியவகையை சேர்ந்த ராஜநாகம் வளரும் பருவத்தில் இருந்தது. பாம்பு வளரும்போது அதன் தலையில் இருந்து தோல் உரியும். ஆனால் ராஜநாகத்தின் தலையில் இருந்து தோல் உரியாததால் அதன் கண் மற்றும் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் உணவு உட்கொள்ளவும் முடியாத நிலையினால் ராஜநாகம் இறந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து விலங்குகள் ஆர்வலர் ஒருவர் கூறும்போது:-

ராஜநாகம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழ்வதற்கு ஏற்ப சூழ்நிலை கிடையாது. இதன் காரணமாக ஏற்கனவே ஒரு ராஜநாகம் இறந்துவிட்டது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 ராஜநாகங்களில் ஒன்று நேற்று இறந்துவிட்டது. இனிவரும் காலங்களில் பூங்காவில் உள்ள மற்றொரு ராஜநாகத்தை நல்ல முறையில் அது வாழ்வதற்கு ஏற்ப சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். பொதுவாக ராஜநாகங்கள் பசுமைமாறாக் காடுகளில் காட்டாறுகள் மற்றும் நீர் நிலைகளின் அருகில் எப்போதும் குளிர்ச்சியாக உள்ள இடங்களில் வாழும் பழக்கம் கொண்டது.

இந்த வகை பாம்பு சுமார் 15 முதல் 18 அடிவரை வளரக் கூடியவை ஆகும். அதிகபட்சம் 51 முட்டைகள் வரை இட்டு அடைக்காக்கும். பத்து முதல் பதினொரு வாரங்கள் அடைக்காத்த பிறகு 50 செ.மீ. முதல் 52 செ.மீ. வரை நீளமுள்ள குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News