செய்திகள்

வடபழனியில் ஓட்டல் அறையில் இருந்த ரூ.13 லட்சம் தங்க, வைர நகைகள் திருடிய சினிமா உதவி இயக்குனர் கைது

Published On 2016-08-18 02:08 GMT   |   Update On 2016-08-18 02:08 GMT
வடபழனியில் ஓட்டல் அறையில் இருந்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை திருடிய சினிமா உதவி இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

பெங்களூரு கோரமங்களா பகுதியைச் சேர்ந்தவர் அத்தீஸ்வரன் (வயது 39). இவர், கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர், தொழில் நிமித்தமாக தனது மனைவியுடன் கடந்த 14-ந் தேதி சென்னை வந்தார். வடபழனியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

பின்னர் அறையை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றார். இரவில் மீண்டும் அறைக்கு திரும்பினார். அறையில் உள்ள மேஜை மீது வைரத்தால் ஆன தனது கைச்சங்கிலிகள் (பிரேஸ்லெட்)-2, தங்க மோதிரங்கள் 2 மற்றும் ஒரு கைக்கடிகாரம், 3 செல்போன்களை வைத்து விட்டு தூங்கி விட்டார்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த தங்க, வைர நகைகள் திருட்டுப்போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அத்தீஸ்வரன், விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். ஓட்டலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும்படியான ஒருவரின் உருவம் பதிவாகி இருப்பது தெரிந்தது.

கேமராவில் பதிவான நபரின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர், காரைக்கால் சேனியர்குளம் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற அரிபிரகாஷ் (24) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

மணிகண்டன் வடபழனி, செங்கப்பா தெருவில் உள்ள விடுதியில் தங்கி திரைப்பட உதவி இயக்குனராக வேலை செய்து வந்தது தெரிந்தது.

சம்பவத்தன்று தனது நண்பரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மணிகண்டன் அந்த ஓட்டலுக்கு சென்றார். பிறந்தநாள் விழா முடிந்த பிறகு நிகழ்ச்சி நடந்த அறைக்கு எதிர்புறம் இருந்த அத்தீஸ்வரன் தங்கி இருந்த அறையின் கதவு லேசாக திறந்து இருந்தது.

இதனை கவனித்த மணிகண்டன், நைசாக அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று அங்கு மேஜையில் அத்தீஸ்வரன் கழற்றி வைத்திருந்த வைரத்தால் ஆன கைச்சங்கிலிகள், தங்க மோதிரங்கள், கைக்கடிகாரம் மற்றும் 3 செல்போன்களை திருடிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News