தம்பியை கிண்டல் செய்ததை கண்டித்த வாலிபர் அடித்து கொலை: 5 பேர் கைது
திருவான்மியூர்:
பெருங்குடியை அடுத்த கந்தன்சாவடி சோழன் நகர், திரு.வி.க. தெருவில் வசித்து வந்தவர் சத்யா (வயது27). எலக்ட்ரீசன். இவருடன் அவருடைய தம்பிகள் சரவணன், முகுந்தன் ஆகியோரும் தங்கி வேலை பார்த்து வந்தனர். இவர்கள் சொந்த ஊர் அம்பாசமுத்திரம் ஆகும்.
கடந்த 4-ந்தேதி சரவணனை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சிலர் கேலி - கிண் டல் செய்தனர். இதனை சத்யா கண்டித்தார்.
இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் வெங்கடேசனுக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த சத்யா, சரவணனை வெளியே இழுத்து வந்து சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகுந்தன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சத்யாவும், சரவணனும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சத்யா பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக கந்தன்சாவடியை சேர்ந்த வெங்கடேசன், சிவக்குமார், கோபாலகிருஷ்ணன், சூர்யா, விஸ்வநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான அதே பகுதியைச் சேர்ந்த பிரதாப், ராமுவை தேடி வருகிறார்கள். தம்பியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்ட அண்ணன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.