செய்திகள்

காஞ்சிபுரத்தில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை

Published On 2016-08-06 11:43 IST   |   Update On 2016-08-06 11:43:00 IST
காரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் பணம் கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம்:

திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் சத்தியசீலன். பில்டிங் கான்டிராக்டர். இவர் நேற்று காரில் திருக்கழுக்குன்றதிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

வழியில் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு கைப்பையில் வைத்து, காரின் சீட்டில் வைத்தார். காஞ்சிபுரம் காந்திரோட்டில் காரை ரோட்டின் ஓரம் நிறுத்தி ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டுவிட்டு மீண்டும் காருக்கு வந்தார்.

அப்போது காரின் இடது புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு காரின் கதவை திறந்து பார்த்தபோது காரில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பிறகு பதட்டத்துடன் செல்போன் மூலம் சின்ன காஞ்சிபுரம் போலீசாருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். காஞ்சிபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஸ்ரீநாத், சின்னகாஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

காருக்கு அருகே உள்ள சில கடைகளின் உரிமையாளர்களை இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி விசாரணை செய்தார். எதிரில் உள்ள சில கடைகளின் முன்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்த கேமராக்கள் கார் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியை படம் பிடிக்க முடியாத நிலையில் இருந்தது.

காஞ்சிபுரத்திலிருந்து போலீஸ் துப்பறியும் நாய் வந்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் நகரின் மையப் பகுதியான, மக்கள் நெருக்கடியான காந்திரோட்டில் காரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.5 லட்சம் பணம் கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News