செய்திகள்

தேவகோட்டை அருகே 3 வயது மகனுடன் இளம்பெண் கொடூர கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-08-01 10:41 IST   |   Update On 2016-08-01 10:47:00 IST
தேவகோட்டை அருகே 3 வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண், துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லலை அடுத்துள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கண்ணந்தங்குடி தெற்குத்தெரு ஆனந்தன் மகள் ராஜாத்தி என்ற முத்துலட்சுமி (வயது35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகளும், 3 வயதில் ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.

அழகு வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நிலையில் முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் புதுக்குடியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ஹரிசுடன் வெளியே சென்ற முத்துலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தாய், மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. கணவர் அழகுவும் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அவரும் மனைவி-மகனை தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.

இதுகுறித்து முத்துலட்சுமியின் மாமனார் கல்லல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கல்லல் அருகே குரண்டி கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிணற்றில் பார்த்தபோது, 3 சாக்குமூடைகள் மிதந்தன.

இதுகுறித்து அவர்கள் கல்லல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தேவகோட்டை டி.எஸ்.பி. கருப்பசாமி மற்றும் கல்லல் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த 3 சாக்குமூடைகளை வெளியே எடுத்தனர்.

அதனை பிரித்து பார்த்த போது ஒரு சாக்குமூடையில் கால்கள் இல்லாத ஒரு பெண்ணின் உடலும், மற்றொரு மூடையில் 2 கால்களும், 3-வது சாக்கு மூடையில் சிறுவனின் பிணமும் அழுகிய நிலையில் இருந்தது.

இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண்-சிறுவன் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தினார்கள். மேலும் கடந்த சில வாரங்களில் மாயமானவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

அப்போது 14-ந்தேதி முத்துலட்சுமி தனது மகனுடன் மாயமானது தெரியவர, அவரது கணவர், உறவினர்களை வரவழைத்தனர். அவர்கள் உடல்களை பார்த்ததில் மாயமான முத்துலட்சுமி, ஹரிஷ்தான் கிணற்றில் பிணமாக கிடந்தவர்கள் என்பதை உறுதி செய்தனர்.

3 வயது குழந்தையுடன் மாயமான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய்-மகனை கொலை செய்து விட்டு பெண்ணின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி சாக்கில் வைத்து அதனை பெரிய கற்களால் கட்டி கிணற்றில் வீசி உள்ளனர்.

எதற்காக தாய்-மகன் கொலை செய்யப்பட்டனர் என்பது குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News