செய்திகள்

மாமல்லபுரத்தில் இன்று காலை கடல் உள்வாங்கியது

Published On 2016-07-25 13:04 IST   |   Update On 2016-07-25 13:23:00 IST
மாமல்லபுரத்தில் இன்று காலை வழக்கத்தை விட கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. காலை 8 மணி அளவில் திடீரென கடல் நீர் 100 அடி தூரத்துக்கு உள்வாங்கியது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் கடல் நீர் எப்போதும் சீற்றமாக காணப்படும். அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடலில் நீரோட்டப் போக்கு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடபுறமிருந்து தென்புறம் நோக்கி அமைவதால் கடலின் நிலப்பரப்பில் மாற்றம் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கத்தை விட கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. காலை 8 மணி அளவில் திடீரென கடல் நீர் 100 அடி தூரத்துக்கு உள்வாங்கியது.

இதை பார்த்த மீனவர்களும் சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். கடல் நீர் உள்வாங்கிய போது கரையோரத்தில் இருந்த மீனவர்களின் வலைகள், படகுகள் இழுத்து செல்லப்பட்டது. அவற்றை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

பின்னர் காலை 9 மணி அளவில் கடல் நீர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.

இது குறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, “கடலின் இயற்கை சூழலை முன்பு போல் கணிக்க முடியவில்லை. ஒருபுறம் கடல் உள்வாங்குகிறது. மறுபுறம் கடல் சீற்றத்துடன் கடல் நீர் கரைபுகுந்து வலைகளை இழுத்துச் செல்கிறது” என்றார்.

Similar News