செய்திகள்

பண்ருட்டி அருகே அ.தி.மு.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

Published On 2016-07-22 12:13 IST   |   Update On 2016-07-22 12:13:00 IST
பண்ருட்டி அருகே தேர்தல் தொடர்பான முன்விரோதத்தில் அ.தி.மு.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனர்.
பண்ருட்டி:

பண்ருட்டியை அடுத்த அவியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன் (வயது 30). அ.தி.மு.க. பிரமுகர். அதே ஊரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஊராட்சி செயலாளராக பணிபுரிகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தேர்தல் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று பலராமன், அவரது வயல்வெளியில் நடந்து சென்றார். அப்போது சரவணன், அவரது உறவினர்கள் 4 பேர் அங்கு வந்து பலராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பல ராமனை தாக்கினர். இதில் பலராமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பலராமனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடலூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பலராமனை ஆஸ்பத்திரிக்குள் புகுந்த மர்ம நபர்கள் நீ ஆஸ்பத்திரியில் இருக்கக்கூடாது. ஊருக்குள்ளும் வரக்கூடாது. மீறி வந்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.

அதிர்ச்சி அடைந்த பலராமன், அவரது மனைவி பிரியா ஆகியோர் குடும்பத்தோடு கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது பிரியா போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் புகார் மனு கொடுத்தார்.

அதில், எங்களை அவியனூர் ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

Similar News